சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது
வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு
கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோராProsopis
juliflora என்பதாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca எனக்
கூறுவர். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும்தென் அமெரிக்கா போன்றவற்றை
தாயகமாகக் கொண்ட இவை, ஆசிய, ஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக்
களைத் தாவரமாக உருவெடுத்துள்ளது. பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற
நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது
இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து
பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த
முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான
ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும்
வைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை
வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25
விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப்
பாழ்படுத்தியிருக்கிறது. இதனைக் களைய பல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக சீமை கருவேலமரம்
ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு தீவிரமாக இம்மரங்களை வேரோடு
அகற்றிவருகிறது. தமிழக அரசிடம் இம்மரங்களை தடை செய்யக்கோரியும் பல
போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை
இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல்
பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப்
பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச்
செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த
இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப்
படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில்
உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே
தடுக்கிறது. வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற
தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள்
வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று
பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக
இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு
கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை. இவைகளால் ஏற்படும்
பாதிப்பு அளவிட முடியாதது. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும்
வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு
வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக்
கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி
எறியப்பட்டுள்ளன. காடுகளில் இந்த தாவரத்தின் இலைகளை உண்டு சமீபத்தில்
யானைகள் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாவரம்
முழுமையுமே நஞ்சாக உள்ளது. சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும்
உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள் , உண்ணாவிரதங்கள் ,
கோரிக்கை மனு அளித்தல் , உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு
அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும்
போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை
கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி சுமார் 100
ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு
மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து
காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம்
மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு
விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர். தமிழ்நாட்டில், மதுரை சம
உரிமை அமைப்பு சார்பில், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக
நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டி
ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த
மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். இவை நிலத்தில் நீரில்லாத போது, காற்றின்
ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன,மேலும் கரியமில வாயுவை அதிக அளவில்
வெளியிடுவதாலும் வளிமண்டலம் மாசுபடுகிறது. எனினும் தமிழக அரசு தரப்பில்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
http://aaproject.org
http://aaproject.org